'ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரி தான் பிடித்திருந்தது' - மாதவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து
|ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருது வென்றதைத் தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் சிறந்த படமாக நடிகர் மாதவன் இயக்கி நடித்திருந்த 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அந்த படத்தின் இந்தி மொழி பதிப்புக்காக வழங்கப்படுகிறது. இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
இதனையடுத்து நடிகர் மாதவனுக்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துகள் மாதவன். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி திரைப்படம் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் நினைவில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.